கொடைக்கானலில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 8 பேர் கைது
- கொடைக்கானலில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 8 பேர் கைது செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்
- யானை தந்தம் விற்பனை, 8 பேர் கைது
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கொண்ட கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47), திருச்சூரைச் சேர்ந்த சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 8 பேர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 2 யானைத்தந்தங்கள், 1 நாட்டு துப்பாக்கி மற்றும் இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் சுற்றி வளைத்து யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை கைது செய்த போது, கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் தப்பி ஓடி விட்டார்.
அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் தந்தங்கள் விற்பனை செய்யும் முயற்சி இது முதல் முறையா, அல்லது தொடர்ந்து நடைபெற்று வருகிறதா? வேறு ஏதேனும் வன விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் இவர்களிடம் உள்ளதா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.