தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.800 கோடி செலவில் திட்டம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
- இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
- பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.
ஆறுமுகநேரி, மே. 9-
தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் முகம்மது மொய்தீன், நகர் மன்ற தலைவர் முத்து முகம்மது, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முகம்மது அலி ஜின்னா, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரெங்கநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவராக திகழும் நமது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்குகிறார். வருகின்ற காலத்தில் பாரதீய ஜனதாவை மத்திய அரசிலிருந்து வீழ்த்தும் நோக்கத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அப்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கினார். மகளிருக்காக இலவச பஸ், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்லும்போது மாதந்தோறும் ரூ.ஆயிரம், முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மேலும் பல்வேறு திட்டங்களை வரும் காலங்களில் தி.மு.க. அரசு செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வின் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் கிருபாகரன், வக்கீல் விஜி கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பிரதிநிதிகள் லேண்ட் மம்மி, பன்னீர் செல்வன், மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பாளர்கள் ஜலீல், ஹாஜி முராசாகிப், நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகர துணை செயலாளர்கள் கதிரவன், முகம்மது நௌபல், ராம ஜெயம், நகர பொருளாளர் தாஜ்ஜுதீன், மகளிரணி அமைப்பாளர்கள் பூங்கொடி, மல்லிகா, நகர மாணவரணி அமைப்பாளர் முகம்மது முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.