இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் பெற்றுள்ளனர்-ஊட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி
- 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
- திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதியன விரும்பு 2023 என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசையுடன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கென தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைகள், இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பின்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காதர்லா உஷா, கலெக்டர் எஸ்.பி அம்ரித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.