கோவை மாவட்டத்தில் 97 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு
- குறுந்தகவல் அனுப்பிய 33 ஆயிரம் பேரிடம் நேரடி களஆய்வு
- துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவு
கோவை,
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் செப்.15-ல் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 கார்டுதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். விதிமுறைக்கு உட்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்து வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஏராளமான பெண்கள் நினைத்ததால், அந்த பெண்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இதுதவிர விண்ணப்பம் பெற்றவர்களில், பலரும் பூர்த்தி செய்து விட்டு கொடுக்காமல் இருந்தனர். அவர்களுக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவ லகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் அமைத்த உதவி மையங்களுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து நிராகரிப்பு செய்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, மேல்முறையீடு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 64 ஆயிரம் பெண்கள் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே பெறப்பட்டவற்றில் பரிசீலனையில் உள்ளது என குறுந்தகவல் அனுப்பப் பட்ட 33 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் தகுதியை கள ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
மேலும் மாநகராட்சி பகுதியில் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதால் உதவி கமிஷனர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, களப்பணிக்கு பில் கலெக்டர்களை அனுப்ப அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்த பணிக்கு மாவட்ட அளவில் 438 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உரிமை தொகை கேட்டு 64 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே 33 ஆயிரம் விண்ணப்பங்கள் என மொத்தம் 97 ஆயிரம் பேரின் விவரங்கள் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
கள ஆய்வுக்கு செல்லும் ஊழியர்களுக்கு சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்தவர்களின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு சொந்தவீடு இருக்கிறதா? வருமான வரி செலுத்துபவர் வீட்டில் இருக்கிறாரா? கார் வைத்துள்ளனரா? போன்ற கேள்விகளை கேட்டு பதிவு செய்வார்கள்.
அவர்களது பதிலில் திருப்தி இல்லை என்றால், வி.ஏ.ஓ., அல்லது பில் கலெக்டர்கள் நேரில் சென்று கள ஆய்வு செய்து இதற்கென உருவாக்கியுள்ள பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.
துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் 45 நாட்கள் ஆக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.