நெல்லையில் 9 ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு ரூ.9.92 கோடியில் மருத்துவ உபகரணங்கள்- மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
- காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார்.
- தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.
மருத்துவ உபகரணங்கள்
துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர பொறியாளர் அசோகன் மற்றும் செயற்பொறியாளர்கள், 4 மண்டல உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், 55 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரூ.9.92 கோடி மதிப்பில் மாநகராட்சி பகுதியில் உள்ள 9 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலி குடத்துடன்...
மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்கள், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்வதற்கு சுயஉதவிக்குழுக்கள் மூலம் 645 நபர்களை நியமிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற 32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன் காலிக்குடத்துடன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது கடந்த ஒருவாரத்திற்கு மேலாக எங்களது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியம் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பாலபாக்யா நகரில் விடுபட்ட இடங்களில் சாலை கள் அமைக்க வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தார்சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
26-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரபா சங்கரி, 30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன்நாதன் என்ற கணேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 10 மணிக்கு வந்தனர். ஆனால் 10.25 மணி வரை கூட்டம் நடைபெறாததால் அவர்கள் கையெழுத்திட்டு சென்றனர்.