மேட்டுப்பாளையத்தில் கிணற்றில் குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
- நித்யாவின் பெண் குழந்தை கவுதமி முதல் கணவர் செந்திலின் பெற்றோர் வீட்டில் வளர்த்து வந்தார்.
- கவுதமி மரணம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை வெள்ளியங்காடு பூமாதேவி நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (30). இவருக்கும், இவரது தாய்மாமா செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 14 வயதில் கவுதமி என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட வெள்ளியங் காட்டைச்சேர்ந்த கோபிநாத் என்பவரை நித்யா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகித் என்ற ஆண் குழந்தை பிறந்த உள்ளது. நித்யாவின் பெண் குழந்தை கவுதமி முதல் கணவர் செந்திலின் பெற்றோர் வீட்டில் வளர்த்து வந்தார். கவுதமி அங்கிருந்தபடி வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கவுதமியை பராமரித்து வந்த தாத்தாவும், பாட்டியும் வயோதிகம் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மரணம் அடைந்தனர். இதனால் அவர்களது பராமரிப்பில் இருந்த கவுதமி மன உளைச் சலுக்கு ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத போது பிளேடால் கையை கிழிப்பது, சாணிப்ப வுடரை குடிப்பது என அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று கவுதமி, தனது தாயாருடன் தோட்டத்துக்கு சென்றார். அங்கு தாயார் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் குடித்து விட்டு வருவதாக சென்ற கவுதமி, தோட்டத்தில் உள்ள ஆழமான கிணற்றில் குதித்தார். அதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கவுதமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பிணமாக தான் மீட்க முடிந்தது. கவுதமியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவுதமி மரணம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.