கோவை-பொள்ளாச்சி ரோட்டில் 450 கிலோ குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது
- தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
- போலீசார் காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதில் 2 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் அந்த கார் காந்திநகர் பஸ் நிலையம் அருகே, சாலைநடுப்புற தடுப்பில் மோதியது. இந்த விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே காரில் பயணித்த 2 பேர் வெளியே குதித்து தப்பி ஓடி விட்டனர். எனவே பொதுமக்கள் காருக்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
அதன்பிறகு காருக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு 450 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
கோவையில் விபத்தில் சிக்கிய காருக்குள் குட்கா பாக்கெட்டுகள் மூட்டைக்கணக்கில் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே சொகுசு காருடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
சொகுசு காரில் இருந்து தப்பி ஓடிய கும்பல் எங்கு இருந்து குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்து விபத்துக்கு உள்ளான காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.