சாட்சியை மிரட்டிய ரவுடி மீது வழக்கு
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.