திருவள்ளூரில் மறியலில் ஈடுபட்ட 131 பேர் மீது வழக்குப்பதிவு
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.