வெளிநாட்டில் விவசாயியை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டும் நிறுவனம்- கண்ணீர் மல்க மனைவி மனு
- எங்கள் நிறுவனத்தில் வாங்கிய கடனை கொடுக்காததால் அவரை கொலை செய்யப்போகிறோம்.
- நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
அப்போது தஞ்சை மாவட்டம் குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி கார்த்திகா (வயது 31 ). இவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எனது கணவர் விஜயராகவன் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால் பணி செய்த நாட்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 5-ம் தேதி எனது மாமியாருக்கு அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு போன் வந்தது.
அதில் விஜயராகவன் எங்களது நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார்.
கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரை கொலை செய்யப் போகிறோம் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர்.
மறுநாளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயராகவனை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் ரொக்க பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டினர். அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நாங்கள் வசிக்கும் இடத்தை அந்த நிறுவனத்தில் உள்ள ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர். இதனால் இந்த நிறுவனத்தில் உள்ள ஒருவர் எங்களிடம் இருந்து
ரூ. 5 லட்சம் வாங்கி சென்றார். எனது கணவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர் . நான் என் கை குழந்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
இதனால் எந்த கணவரை அந்த நிறுவனத்திலிருந்து பத்திரமாக மீட்டு தர வேண்டும். இவ்வாறு கார்த்திகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.