கீழப்பாவூர் பேரூராட்சியில் திறப்பு விழா நடந்த சிலமணி நேரத்திலேயே கல்வெட்டுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
- கீழப்பாவூர் பேரூராட்சியில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
- திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் கல்வெட்டுகளை நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் தலைவர் அறை புதுப்பித்தல், இளநிலை பொறியாளருக்கு தனிஅறை கட்டுமான பணிகள் முடிவுற்றன.
திட்டப்பணிகள்
மேலும் 6-வது வார்டில் மைதானம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு செய்து வர்ணம் பூசப்பட்டது. காமராஜர் பூங்கா அருகில் உள்ள கிளை நூலக கட்டிடம் பராமரித்தல், கூடுதல் கட்டிடம் கட்டுதல் உட்பட வேலைகளுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த 3 திட்டப் பணிகளும் நிறைவு பெற்றன.
இந்நிலையில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் நேற்று திறந்து வைத்தார்.
முன்னதாக இந்த 3 பணிகளிலும் அரசு விதிமுறைப்படி கல்வெட்டுகள் அமைக்கப்படாமல் உள்ளதை முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன், கலெக்டர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனரகத்திற்கு புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அந்த கல்வெட்டுகள் பேப்பர்களால் மூடப்பட்டிருந்தன.
கல்வெட்டுகள்
திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் இந்த 3 கல்வெட்டுகளையும் நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 3 கல்வெட்டுகளையும் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட தகவலில் அரசு விதிமுறைகளின்படி எம்.எல்.ஏ. வின் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது மரபு.
ஆனால் அதனை செய்யாததால் கல்வெட்டுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதிய கல்வெட்டில் தொகுதி எம்.எல்.ஏ. வின் பெயரும் பொறிக்கப்பட்டு பின்பு முறைப்படி கல்வெட்டுகள் திறக்கப்படும் என தெரிவித்தனர். காலையில் திறப்பு விழா கண்ட கட்டிடத்தில் கல்வெட்டுகள் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.