திட்டக்குடி அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கழிவு நீர் தொட்டியில் விழுந்து பலி
- செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
- மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.