கடலூரில் என்ஜின் டியூப் வெடித்து பாதியில் நின்ற அரசு பஸ்:பயணிகள் அலறல்
- பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
- பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு டவுன் பஸ் பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் கடலூர் அண்ணா பாலத்தை கடந்து பீச் ரோடு சிக்னல் அருகில் வந்த போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு பதறிய பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சிலிருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
பின்னர் பஸ் பழுதானது குறித்து, போக்குவரத்து பணிமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து பழுதாகி நின்ற பஸ்சை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சின் இன்ஜினில் இருந்த டியூப் ஒன்று வெடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சை சாலையோரம் அப்புறப்படுத்தி அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு இடையே பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று பஸ்சில் பண்ருட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.