அன்னூரில் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
- அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
- தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தாய் திட்டம் 2 மூலமாக 2018-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூட மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உடற்பயிற்சி கூடமானது நாரணாபுரம், கல்ராசிபாளையம், மாணிக்கம் பாளையம், குன்னத்தூர், குன்னத்தூர் புதூர், மற்றும் நான்தேவகவுண்டன் புதூர் உட்பட்ட கிராமங்களில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் முதியோர்களின் உடல் நல ஆரோகியத்திற்காக இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
தனியார் உடற்பயிற்சிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதனால் அரசு சார்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடமானது பயன்படுத்தபடாமல் வீணாக உள்ளது.
இதன் சுற்று சுவற்றில் பொதுமக்கள் துணிகளை காயப்போட்டு வருகின்றனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள உபகரணங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடற்பயிற்சி கூடத்தை ஊராட்சி நிர்வாகம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.