தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் மான்
- ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
- மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.
இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.