உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தில் 2 அடுக்கு மாடிகளுடன் உருவாகும் நினைவு அரங்கம்

Published On 2023-07-27 08:57 GMT   |   Update On 2023-07-27 08:57 GMT
  • நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை,

கோவை பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிச்சாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய முன்னோடிகளுக்கு உருவச்சிலை மற்றும் நினைவரங்கம் அமைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம், ரூ.4.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது 2 அடுக்கு மாடிகள் உடைய கட்டிடமாக அமையும். அங்கு உள்ள கீழ்த்தளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்து வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேல்த ளத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் குறித்து இன்றைய தலைமுறையினர் அறியும்வகையில் திட்டப்பணிகள் அடங்கிய மாதிரி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு உருவச்சிலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறி உள்ளார்.

Tags:    

Similar News