சிங்காநல்லூரில் தாய்-மகள் சென்ற மொபட் மீது ஆட்டோவை மோதி வழிப்பறி
- கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
- புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி புஷ்பா (வயது47). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ மொபட் மீது மோaதியது.
இதில் நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பையை பறித்து கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பினர்.
கீழே விழுந்ததில் காயம் அடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை பறித்த கும்பல் அதில் ரூ.500 மட்டும் இருந்ததால் ஏமாற்றம் அடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.
இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது ஆட்டோவை மோத செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.