கலெக்டரின் முயற்சியால் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு புதிய வீடு
- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.
- கலெக்டர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது40). இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு நிவேதா (16) என்ற மகளும், ஹரி (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லதாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். லதா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனை அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.இதனை கொண்டு புதிய வீடு கட்டப்பட்டது. நேற்று அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார். முன்னதாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க ஒன்றிய செயலாளர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.