போத்தனூரில் இருளில் மூழ்கிய மின்கோபுர விளக்கு
- இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.
- மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் கடைவீதியில் இருந்து மேம்பாலம் செல்லும் வழியில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இது இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. ஆனால் தற்போது அங்கு உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறி செல்கின்றன.
உயர் கோபுர மின் விளக்கின் கீழ்ப்பகுதியில் 2 வேகத்தடைகள் உள்ளன. சாலையின் இடதுபுறம் பெரிய குழி தோண்டி, மூடப்படாமல் உள்ளது. வலது பக்கம் டிவைடர் உள்ளது. எனவே போத்தனூர் கடைவீதியில் இருந்து வேகமாக செல்லும் வாகனங்கள் உயர்கோபுர விளக்கு ஏரியாததால், வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. வலது பக்கம் உள்ள டிவைடரில் முட்டி நிற்கும் சூழலும் நிலவுகிறது.
இதுதவிர சாலைஓரத்தில் நிற்கும் மர்ம நபர்கள் இருளை பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே போத்தனூரில் நீண்ட நாளாக எரியாமல் உள்ள மின் கோபுர விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.