காரைக்கால் நகராட்சி சந்தை அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்து
- காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது.
- இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து, காரைக்கால் பஸ் நிலையம் நோக்கி, 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காரைக்கால் நகர் பகுதியான திருநள்ளாறு சாலை, நகராட்சி வாரச்சந்தை அருகே, பஸ் அதிவேகமாக வந்தது. அப்போது, பஸ்சின் முன்புறம் ஸ்டேரிங் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அங்கும்மிங்கும் அலைந்து, சாலையில் சென்ற காரைக்கால் பச்சூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரது 3 சக்கர வாகனத்தில் மோதி, தொடர்ந்து, சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மாற்றுத்திறனாளி, அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்து காயம் அடைந்தார். அதேபோல், பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்தனர். தொடர்ந்து, இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் காரைக்காலை அடுத்த அண்டூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.