பொள்ளாச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டை உடைத்து 44½ பவுன் நகை கொள்ளை
- அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நான்சிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சந்திரா (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர்.
கடந்த 10-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றார். அங்கு வைத்து சந்திரா அவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார்.
இந்தநிலையில் 11-ந் தேதி இரவு இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், டாலர், மோதிரம் உள்பட 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சந்திராவுக்கு தகவல் தெரி வித்தார். அவர் உடனடியாக தனது வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 44½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.