உள்ளூர் செய்திகள் (District)

ஒருவழிப்பாதையில் விதிமீறி செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் ஒருவழிப்பாதையில் விதிமீறி வரும் வாகனங்களால் தொடர் விபத்து

Published On 2023-07-27 07:30 GMT   |   Update On 2023-07-27 07:30 GMT
  • நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.
  • பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் மற்றும்.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் குறிப்பிட்ட சில சாலைகள் ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்க பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அடிக்கடி எதிரே விதிமீறி வருவதால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது.

சாலைகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.ரோடு, சத்திரம் தெரு, அரசு ஆஸ்பத்திரி எதிரே, ஜி.டி.என். சாலை உள்ளிட்ட சாலைகள் இதுபோல போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.

இதுபோன்ற சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் விதிமீறி வாகனங்கள் மின்னல் வேகத்தில் வருவதால் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இந்த சாலைகள் மட்டுமின்றி பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிரே இருவழிப்பாதைக்காக பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில் விதியை மீறி காலையில் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன.

பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தாலும் போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு நடக்கிறது.

பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு இதுபோன்ற விதிமீறலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் செல்போன் பேசியபடியே வாகன விபத்துகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News