கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்- பொதுமக்கள் பீதி
- வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
- வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி, மரகட்டா, ஜார்க்கலட்டி, நொகனூர், நெல்லுக்குந்தி, ஜவளகிரி, அய்யூர், அஞ்செட்டி போன்ற பகுதிகளில் தனித்தனியாக ஒற்றை காட்டு யானைகள் சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகள் தாக்கி கடந்த 2 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள திப்ப சந்திரம் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவுத் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்துள்ளது. இரவு நேரத்தில் கிராமத்தின் அருகே வந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டின் முன்பு நின்ற நாய்களை பிளிறியபடி துரத்தி சென்றது.
இந்த காட்சிகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நீண்ட நேரம் சுற்றித்திரிந்த அந்த யானை, பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது.
இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்தனர். விரைந்த வந்த வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், அச்சுறுத்தி வரும் காட்டுயானையை அடர்ந்தவனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.