உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்து சூறையாடிய ஒற்றை காட்டு யானை

Published On 2023-10-26 09:12 GMT   |   Update On 2023-10-26 09:12 GMT
  • காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓடியதால் டிரைவர் உயிர் தப்பினார்
  • உயிர் சேதம் ஏற்படும் முன்பே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இதில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலைக்கு வந்து, வாகன ஓட்டிகளை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

யானை நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டி வந்தவர், காரை சிறிது தொலைவிலேயே நிறுத்தி விட்டார்.சாலையில் சுற்றி திரிந்த யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

திடீரென அந்த யானை, காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காரின் டிரைவர், காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

காரின் அருகே வந்த யானை ஆக்ரோஷமாக, காரை அடித்து நொறுக்கியது. மேலும் காரை அப்படியே அலேக்காக தூக்கி நடுரோட்டில் வீசியது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சத்தில் உறைந்து போயினர்.

20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் யானை அங்கேயே நின்றபடி காரை சேதப்படுத்தியது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த ஆண்டு சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து உணவு தேடி மலை பாதைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News