விற்பனைக்கு வைத்திருந்த வாழை இலை கட்டிற்குள் இருந்த பாம்பு:உழவர்சந்தையில் திடீர் பரபரப்பு
- வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
- இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.இன்று காலை கடலூரை சுற்றியுள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
கடலூர் காரைக்காட்டை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள், பாலூர் பகுதியில் இருந்து வாழை இலைகளை அறுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனைக்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார். அப்போது வாழை இலை கட்டுகளில் இருந்து பாம்பு வெளிவந்து, மீண்டும் உள்ளே சென்று விட்டது. இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார். வாழை இலை கட்டுகளை பிரித்துப் பார்த்து, அதற்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.