பாளை பஸ் நிலையம் அருகே வணிக வளாக கட்டிட பகுதியில் திடீர் தீ விபத்து
- இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது.
- மரப்பலகையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் அணைத்தனர்.
நெல்லை:
பாளை பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மேயரின் பழைய பங்களா இருந்தது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சென்ட்ரிங் அமைப்பதற்காக ஏராளமான மரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
இந்நிலையில் இன்று அதிகாலை கட்டிட வேலைகள் நடைபெறும் வணிக வளாகத்தின் முன்பிருந்து புகைமூட்டம் எழுந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய வீரர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்ட மரப்பலகையில் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மரப்பலகையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? மர்மநபர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.