சாலையை ஆக்கிரமித்து நாற்காலியில் அமர்ந்த வாலிபர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்ததால் அதிரடி கைது
- மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
- வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி க்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடி டாஸ்மாக்கில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அந்த வழியாக வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் குடித்து விட்டு வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
அப்போது போதையில் ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார். அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி திட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் கொடுத்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தலைக்கேறிய போதையில் சாலையில் மரக்கட்டகளை போட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.