கோவையில் நண்பர்கள் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர்
- தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
- காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.
கோவை
கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.