போதை பொருள் கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைப்பு
- ஓமலூர் அருகே போதை பொருள் கடத்திய வாலிபர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- விசாரணையில் போதை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் பெங்களூர் சென்று வாங்கி பலமுறை கடத்தி வந்தது தெரிய வந்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ், பான்பராக் மற்றும் போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை ஓமலூர் போலீசார் கண்காணித்து அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹான்ஸ், கூல் லிப்ஸ், போதை பாக்குகள், நிக்கோடின் போன்ற பொருட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓமலூர் போலீசார் விமான நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி சோதனை செய்யும்போது, அங்கே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், மோட்டார் சைக்கிளை திருப்பி செல்ல முற்பட்டார். அவரை போலீசார் விரட்டும்போது, மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டு, தப்பியோடி சென்றார்.
இதையடுத்து மோட்டார் சைக்கிள் கட்டி வைக்கபட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்த போது நான்கு மூட்டைகள், இரண்டு பைகளில் ஹான்ஸ், போதை பாக்குகள், மற்றும் போதை வஸ்துகள் இருந்தன. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
பின்னர் மூட்டைகளை ஆய்வு செய்தபோது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, தப்பியோடிய நபரை தேடி வந்தனர்.
கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து சேலம் அம்மாபேட்டையில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த அவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்கள் இருசக்கர வாகனத்தில் பெங்களூர் சென்று வாங்கி பலமுறை கடத்தி வந்தது தெரிய வந்தது.அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.