ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் 1 வாரத்துக்கு பிறகு பிணமாக மீட்பு
- ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
- சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.
சீர்காழி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் மதகு சாலையை சேர்ந்த ஆகாஷ் (வயது 24), மனோஜ் (23), ராஜேஷ்குமார் (29), கொளஞ்சி நாதன் (34) ஆகிய நான்கு பேரும் கடந்த 18ஆம் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மணல் திட்டத்தில் ஏறி நின்று கூச்சலிட்டனர்.
அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதனை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இதில் ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.
பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உடல் அமரர் ஊர்தி மூலம் திருவிடைமருதூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 1 வாரத்திற்கு பிறகு ராஜேஷ் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.