மேட்டுப்பாளையத்தில் கனமழையால் ரோட்டில் முறிந்து விழுந்த மரம்
- தீயணைப்புத் துறையினர் அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மோத்தேபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த சுமார் 80 அடி உயரமுள்ள ராட்சத மரம் சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மற்றொரு மரமும் சேர்ந்து சாய்ந்தது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் ராட்சத மரங்களை அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்டது.
சாலையில் விழுந்த மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.