மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் 100 சதவீதம் நிறைவு- அதிகாரி தகவல்
- ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
- 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
15-ந் தேதி வரை நீட்டிப்பு
இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31-ந் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்ப ட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். இன்னும் குறைந்த அளவிலான பொது மக்களே ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீதி உள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
100 சதவீதம் நிறைவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஆதார் இணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி கூறியபோது, நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 114 மின் நுகர்வோர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று 31-ந் தேதி வரை தங்கள் ஆதார் எண்களை 100 சதவீதம் இணைத்துள்ளனர்.
இதற்காக பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.