உள்ளூர் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை

Published On 2023-05-17 08:51 GMT   |   Update On 2023-05-17 08:51 GMT
  • தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றம் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பெற்றது. அதன்படி, தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதிகைள பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், உரிமம் பெற்று செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், பொதுப் பணித்துறையின் கட்டிட உறுதித்தன்மை சான்றும் மற்றும் பார்ம் -டி உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கான விடுதி, காப்பகங்களில் விடுதிக் காப்பாளர் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண், பெண் ஆகவும் இருக்க வேண்டும்.

பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் மற்றும் உரிமத்தை புதுப்பிக்கவும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்ட விதிகள் 2015ல் காணப்படிம் படிவம் -1, படிவம் -4 ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், தொலைபேசி எண்.04343-235717 மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News