சீர்காழியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை
- கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை
- நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகரமைப்பு ஆய்வர் மரகதம், கணக்கர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-
ரமாமணி (அ.தி.மு.க)- மாதம் தோறும் நகர் மன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொறை வாய்க்கால் பகுதியில் மின்விளக்குகள் ஏற்படுத்திட வேண்டும் . ராஜசேகர் (தே.மு.தி.க)- நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப்படும் சாலைகளுக்கு அந்தந்த பகுதியில் மதிப்பீட்டு, வேலையின் விபரம் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.
ரேணுகா ( தி.மு.க)- எனது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாஜி தெருவில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நித்யாதேவி:- மாரியம்மன் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். பாலமுருகன்:- கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வள்ளி (தி.மு.க)- மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
சாமிநாதன் (தி.மு.க)- குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு, நகராட்சி சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பதை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசும்போது :- நகராட்சி பகுதியில் 88 இடங்களுக்கு மின் கம்பி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது வரவேண்டிய 123 புதிய மின்விளக்கு பிட்டிங்கில், 64 வந்துள்ளது. இதில் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து அமைக்கப்படும். நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்து வார்டு தேவைகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என்றார்.