உள்ளூர் செய்திகள் (District)

மேட்டுப்பாளையம் நகரசபை பகுதியில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை

Published On 2023-04-11 09:31 GMT   |   Update On 2023-04-11 09:31 GMT
  • விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் நகராட்சியில் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மனித கழிவுகள், கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத் கூறியதாவது:-

மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், கழிவுநீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன் அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.

உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன் குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது.இதேபோல மேட்டுப்பாளையம் நகராட்சியில் அகற்றப்படும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News