உள்ளூர் செய்திகள் (District)

சிறுவர்களை பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை

Published On 2023-05-10 09:11 GMT   |   Update On 2023-05-10 09:11 GMT
  • கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650)
  • கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்கி பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650) என்ற எண்ணை அதிக அளவு பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் இருப்பின் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியங்களின் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

கூட்டத்தில் தொழிலாளர் உதவி கமிஷனர் அமலாக்கம், சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின், தொழிற்சங்க பிரநிதிகள், அரசு சார்பற்ற உறுப்பினர்கள் (ஆதிதி ராவிடர், பழங்குடியினர் இன உறுப்பினர்கள்) மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் நாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News