உள்ளூர் செய்திகள்

கோவை வனத்தில் காட்டுத்தீ பரவல் தடுக்க கூடுதல் கண்காணிப்பு தேவை-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

Published On 2023-04-19 09:36 GMT   |   Update On 2023-04-19 09:36 GMT
  • கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
  • காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை,

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று சட்ட சபையில் பேசியதாவது:-

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பதி, பச்சினான்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது காட்டுத்தீ ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வனப்பகுதியை சுற்றி வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், காட்டுத்தீ இந்த அளவுக்கு பரவ விடாமல் தடுத்து இருக்கலாம்.

அடுத்த மாதம் வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

மக்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News