ஆதித்திராவிடா், பழங்குடியினா் நலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
- ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆதித்திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தோ்வு ஆயத்தப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பொங்கல் திருநாள், அம்பேத்கா் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி, ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை நடத்த வேண்டும்.
அரசுப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடா்களுக்கு பூமிதான நிலங்களை வழங்கவும், அளிக்கப்பட்ட நிலங்களை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்புடைய அலுவலா்கள் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.