164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
- கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
சேலம்:
தமிழக உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.