அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா
- மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் அவசர கூட்டம் பழைய நகராட்சி அலுவலகம் படேல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 48 வார்டுகளில் உருவாக்க ப்பட்ட 192 வார்டு பகுதிகளுக்கு அரசாணையில் தெரிவித்துள்ளபடி வார்டு குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாரிக்க அனுமதிக்க ப்பட்டுள்ளது என்ற தீர்மானம் வாசிக்கப்ப ட்டது.
அப்போது குறுக்கிட்ட 19 மற்றும் 33-வது வார்டு அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது வார்டில், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர், துணைமேயர் எழுந்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, கவுசல்யா தங்களுக்கு உரிய விளக்கத்தை மாநகராட்சி மன்றம் தெரிவிக்காததாலும், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிடக்கோரியும் கூட்டம் நடைபெற்ற படேல் அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த 19,33-வது வார்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரிடம் வார்டு குழு பட்டியல் விவரத்தை கேட்டறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 48 வார்டுகளில் உள்ள 192 வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடு த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.