உள்ளூர் செய்திகள்

ஊட்டி படகு இல்லத்தில் சாகச விளையாட்டு பூங்கா- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

Published On 2023-06-06 08:57 GMT   |   Update On 2023-06-06 08:57 GMT
  • ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
  • நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக படகு இல்லத்தில் சாகச விளையாட்டு அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அப்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில், தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ள ஜிப் லைன், ஜிப் மிதிவண்டி, பங்கி ஜம்பிங், தொங்கு பாலம் ஆகிய பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்தபடியாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் பகுதியில், உணவகம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து ரூ.3.25 மதிப்பீட்டில் தயாராகி வரும் கெம்ப்ளிங் சாகசம், மரவீடு ஆகியற்றின் கட்டுமான பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழக சுற்றுலா அமைச்சர் கா. ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. எனவே இங்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளை மேலும் குஷிப்படுத்தும் வகையில், சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவு றுத்தி உள்ளார்.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலா வளர்ச்சி அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 2022-வது ஆண்டு சுமார் 24 லட்சம் சுற்றுலாப்பணிகள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை சுமார் 29 லட்சம் பேர் வருகை தந்து உள்ளனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், சாகச பூங்கா அமைப்பதற்காக ரூ.10 கோடியும், கோடப்ப மந்து கால்வாய் பணிக்காக ரூ.10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி படகு இல்லத்தில், சாகச சுற்றுலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பொது கூட்டு திட்டத்தின் கீழ் அமைய உள்ளது.

இங்கு சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு (நிப் லைன்), விதானப் பயணம் (கேனோபி டூர்), இழைவரி சுழற்சி (ஜிப் சைக்கிள்), மாபெரும் ஊஞ்சல் (ஜெயண்ட் ஸ்விங்), ரோலர் கோஸ்டர் ஜிப்லைன் , பங்கீ ஜம்பிங், ராக்கெட் எஜேக்டர் ஆகிய பணிகள் நடந்து வருகின்றது. அடுத்தபடியாக ஊட்டி கூடுதல் படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில், சாகச மற்றும் கெம்ப்ளிங், மரவீடு உணவகம், வாகனம் நிறுத்தும் வசதி ஆகியவை அமைய உள்ளன. இதன் மூலம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

ஊட்டியை மேலும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் முடிந்த பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மென்மேலும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட சுற்றுலா அதிகாரி உமா சங்கர், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News