குன்னூரில் மீண்டும் குண்டும், குழியுமான மாடல் அவுஸ் குடியிருப்பு சாலை
- 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
ஊட்டி,
குன்னூர் நகராட்சி 20-வது வார்டிற்கு உட்பட்டது மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மூலம் ரூ.22 லட்சம் செலவில் இரவோடு, இரவாக சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாடல் அவுஸ் குடியிருப்பு பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீண்டும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கீழே விழும் நிலையும் காணப்படுகிறது.
இதற்கு காரணம் இந்த சாலை தரம் இல்லாமல் அமைக்கப்பட்டதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பெயர்ந்த சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.