குமாரபாளையம் லட்சுமிநாரயண சாமி கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏலம்
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது.
- தொகை அதிகமாக இருந்ததால் விவசாயிகள் புறக்கணிப்பு.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான குள்ளநாயக்கன்பாளையம் பகுதி விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது. ஆய்வாளர் வடிவுக்கரசி, தக்கார் நவீன்ராஜ் தலைமை வகித்தனர். இதில் செயல் அலுவலர் சின்னசாமி, அலுவலக நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஏலத்தை புறக்கணித்து மனு கொடுத்தனர். இது குறித்து ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது-
3 வருடத்திற்கு ஒருமுறை ஏலம் நடந்து வந்தது. கடந்த ஆண்டு ஒரு வருடம் என மாற்றினார்கள். இதில் விவசாயம் செய்ய கால நேரம் போதுமானதாக இல்லை. வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தால் விவசாயம் செய்ய முடியும்.
தற்போது பொட்டாஷ் உள்பட உரங்களின் விலை அதிகமானது. இடு பொருட்கள் செலவு அதிகம் ஆகி வருகிறது. ஒரு வருடம் வாய்க்காலில் தண்ணீர் வராவிட்டால் செலுத்திய பணம் முழுதும் நஷ்டம் ஏற்படும். விவசாயம் செய்தாலே நஷ்டம் ஏற்படும் நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில், கடந்த ஆண்டு ஏலத்தொகையை விட 10 சதவீதம் அதிகப்படுத்தி கேட்டனர். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.
ஆகவே, 10 சதவீத ஏலத்தொகை உயர்வை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பதை 3 அல்லது 5 வருடமாக உயர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து, ஏலத்தை புறக்கணித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.