உள்ளூர் செய்திகள்

ஐப்பசி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நெல்லை காந்திமதி அம்பாள் கோவில் மண்டபம் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா -12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2022-10-06 09:03 GMT   |   Update On 2022-10-06 09:04 GMT
  • ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
  • கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

நெல்லை:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

ஐப்பசி திருக்கல்யாணம்

இதில் ஆணி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

வருகிற 22-ந் தேதி கம்பாநதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

முன்னேற்பாடு பணிகள்

இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோல் நடும்விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியினை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அதனைத் தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருக்காலுடன் கோவிலை வலம் வந்து காந்திமதி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் இந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News