நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கால்நாட்டுதலுடன் தொடக்கம்
- ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது.
- திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அலுப்பு மண்டபத்தில் நாட்டப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் ஒன்றாகும்.
இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள விநாயகரிடம் சிறப்பு பிரார்த்தனை வைக்க ப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் கால் நடுதலுக்கு பயன்படுத்தப்படும் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்று திருக்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் திருக்கால் நாட்டப்பட்டது.
தொடர்ந்து திருக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவி யங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும், அதனைத் தொடர்ந்து பக்தர்களால் நவதானியம் போடப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்காலுக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
அப்போது கோவில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.