ஆலங்குளம் கொள்ளை வழக்கு- இரும்பு கடை ஊழியர்களின் கைரேகையை போலீசார் ஆய்வு- சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை
- வேதாள செல்வத்தின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அங்கிருந்த ரூ.30 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
- வேதாள செல்வம் கடையில் பணியாற்றி வரும் 12 தொழிலாளர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் அலகாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் வேதாள செல்வம் (வயது 38). இவர் அப்பகுதியில் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
கொள்ளை
நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அங்கிருந்த ரூ.30 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சுப்பையா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் வேதாள செல்வம் இதுவரை ரூ.14 லட்சத்திற்கான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளார். இதனால் ரூ.14 லட்சம் மட்டும் தான் கொள்ளை போனதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைரேகைகள் ஆய்வு
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் வேதாள செல்வம் கடை யில் பணியாற்றி வரும் 12 தொழிலாளர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவரது கைரேகைகள் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளுடன் ஒத்துபோகிறதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இரும்பு வியாபாரி வீட்டில் கொள்ளை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.