கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி
- கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
- 50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை, தொடர்ந்து பெய்த மழையால் கொல்லிமலையில் சீதோசன நிலை முற்றிலும் மாறி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் இங்கு குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதையடுத்து விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். தொடர்ந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
50-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பனிமூட்டம் நிலவுவதால், மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறிய விட்டு வருகின்றன. மேகமூட்டம் மலைகளை கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. சென்னை, பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, கரூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், கொல்லிமலையில் பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடைகளிலும் வியாபாரம் களைக்கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.