சுரண்டையில் வேலாயுத நாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்- கவுன்சிலர்கள் கோரிக்கை
- கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
- நகராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கவுன்சிலர் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சுரண்டை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவரும், சுரண்டை நகரில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான எஸ்.வேலாயுத நாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் சுரண்டை பஸ் நிலையத்தில் கலைஞர் படிப்பகம், பொன்ரா மருத்துவமனை அருகில் கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் வசந்தன் பேசு கையில், சுரண்டை 6-வது வார்டு மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.கவுன்சிலர் அமுதா சந்திரன் பேசுகையில், கட்டிட அனுமதி நிலுவை இல்லாமல் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.கவுன்சிலர் வேல்முத்து பேசுகையில், சுரண்டை காமராஜர் மார்க்கெட் அருகில் காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் மற்றும் கடைகளு க்கான உரிம கட்டணங்களை அபராதம் இல்லாமல் வசூலிக்க வேண்டும் அதற்கு இந்த மன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மேற்கண்ட கோரிக்கைகள் மன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.