கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்
- சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
- தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் வழங்கி வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி:
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த மாதம் 1-ந்தேதி தமிழக கிழக்குக் கடற்கரையில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே நாளில் ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து பனை விதை நடவுப் பணியை சிறப்பாக மேற்கொண்டு, தொடர்ந்து முதல்-அமைச்சரின் "பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு" வலுசேர்க்கும் விதமாக பசுமை காடுகளையும் உருவாக்கி வரும் தூத்துக்குடி சுற்றுச் சூழல் ஆர்வலரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
அதனை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நாராயணன் மற்றும் தமிழக அரசு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாநன் ஆகியோர் விருதும், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினர்.
அமைச்சர்களிடம் விருது பெற்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து விருதையும், சான்றிதழையும் கலெக்டரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்-அமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தொடர்ந்து பசுமைக்கான பணியை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுத்துவோம் என தாமோதரன், மாவட்ட கலெக்டரிடம் உறுதியளித்தார்.