உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே ஊறல் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

Published On 2024-07-15 04:31 GMT   |   Update On 2024-07-15 04:31 GMT
  • தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார்.
  • கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அந்த குடும்பத்தினரே சாராயம் வாங்கி சப்ளை செய்து வந்ததாகவும் புகார்கள் வந்தன.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தெரிவிக்கவும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆண்டிபட்டி அடுத்துள்ள மேய்க்கிலார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன் இருளன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஊறல்களையும் போலீசார் அழித்தனர்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, அதிநவீன போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News